×

பயணிகளின் வசதிக்காக புதிய அரசு விரைவு பஸ்களில் கீழ் படுக்கை வசதி: அதிகாரிகள் தகவல்

சென்னை: பயணிகளின் வசதிக்காக புதிய அரசு விரைவு பேருந்துகளில் கீழ் படுக்கை வசதி ஏற்படுத்த திட்டமிடப்படுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, புதுச்சேரி, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இடையே தினமும் 1,078 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொள்கின்றனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு படிப்படியாக 4,200 புதிய பஸ்கள் வாங்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதில், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 200 பஸ்கள் வாங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, 2,000 பஸ்கள் வாங்கும் டெண்டர் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நான்கு மாதங்களில் புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும். படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளும் வருகின்றன. தற்போது உள்ள படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் மேல் பெர்த் மட்டுமே உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள், ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர்.

மேலும் குறுகிய ஏணிகள் மற்றும் கைபடி வசதிகள் இல்லாததால், மேல் பெர்த்தில் ஏறுவது கடினமாக உள்ளது. மேலும் பயணிகள் கீழ் இருக்கைகளில் அமர்ந்திருந்தால் அசவுகரியம் ஏற்படுவதாக பயணிகள் கூறுகின்றனர். மேலும் பயணிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வரவிருக்கும் பேருந்து நிலையம், ஊர் பெயர் உள்ளிட்டவற்றை அறியும் வகையில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் தகவல் பலகை, மொபைல் சார்ஜிங் வசதி, இரண்டு பயணிகளுக்கு இடையே திரைகள் ஆகியவை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலான பயணிகள், கீழ் படுக்கை வசதியை விரும்புவதால் இனி வரும் புதிய பேருந்துகளில் கீழ் படுக்கை வசதியை ஏற்படுத்த உள்ளோம். முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ரயில்களில் இருப்பது போல், சார்ஜிங் வசதி, சொகுசு இருக்கைகள் இடம் பெறும். அதேபோல், விரைவு பேருந்துகளில் ஊர் பெயர் பலகைகள் கண்ணாடியின் மேல் பகுதியில் இடம் பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பயணிகளின் வசதிக்காக புதிய அரசு விரைவு பஸ்களில் கீழ் படுக்கை வசதி: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Lower bed ,Chennai ,bed ,Dinakaran ,
× RELATED குமரி அரசு மருத்துவக்கல்லூரியில்...